Thursday, 13 September 2012

சினி மினி


சென்னையில் உள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தைப் போல தனது அண்ணன் சத்தியநாராயணாவுக்கும் ஒரு திருமண மண்டபத்தைக் கட்டித் தரவுள்ளார் ரஜினிகாந்த். பெங்களூர் அல்லது ஹைதராபாத்தில் மண்டபம் கட்டும் பணி விரைவில் தொடங்கவுள்ளது.
இந்தியத் திரையுலகின் சூப்பர் ஹிட் "ஷோலே' உள்பட ஏராளமான வெற்றிப் படங்களைக் கொடுத்த பிரபல இயக்குநர் ரமேஷ் சிப்பி, 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்குகிறார். 1995-ம் ஆண்டு வெளியான "ஸமானா தீவானா' படம்தான் இவர் இயக்கிய கடைசி படம். ஸ்ரீதர் ராகவன் எழுதிய த்ரில்லர் கதையைப் படமாக்கவுள்ள ரமேஷ் சிப்பி, படத்தின் நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் பட்டியலை விரைவில் அறிவிப்பதாகக் கூறியிருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, சமஸ்கிருதம், பிரெஞ்சு, ஆங்கிலம் என ஏழு மொழிகளை சரளமாகப் பேசத் தெரிந்த அஸின் தற்போது ஆசிரியர் ஒருவர் மூலம் மராட்டிய மொழியைக் கற்று வருகிறார். அக்ஷய் குமாருடன் நடிக்கும் "கில்லாடி 786' படத்தில் மராட்டியப் பெண் கதாபாத்திரம் ஏற்றுள்ளதால் தானே டப்பிங் பேச முடிவு செய்து அந்த மொழியைக் கற்று வருகிறார்.
அமெரிக்காவிலிருந்து வெளியாகும் பிரபலமான "டைம்' ஆங்கில இதழின் அட்டையில் பாலிவுட் நடிகர் அமீர்கானின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இந்தப் பெருமையைப் பெறும் முதல் இந்திய நடிகர் அமீர்கான்தான். இதற்கு முன்பு பர்வீன் பாபி, ஐஸ்வர்யா ராய் ஆகிய இந்திய நடிகைகளின் புகைப்படங்கள் மட்டுமே "டைம்' இதழில் வெளியாகியுள்ளன.
ஆர்யா, மாதவன் நடித்த "வேட்டை' படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யா கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் ஹன்ஸிகா கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் திடீரென அவர் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக தமன்னாவை கதாநாயகி ஆக்கிவிட்டனர். நாகசைதன்யா-தமன்னா ஜோடி "100% லவ்' என்ற தெலுங்குப் படத்தின் மூலம் பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்தப் பழக்கத்தில் "வேட்டை' ரீமேக்கில் நடிக்கும் நாகசைதன்யாவுக்கு ஃபோனில் வாழ்த்து சொல்லியிருக்கிறார் தமன்னா. அதோடு மட்டுமல்லாமல், அக்கறையோடு நலம் விசாரித்து முந்தைய படப்பிடிப்பின்போது நிகழ்ந்த இனிய சம்பவங்களை நினைகூர... அடுத்த நாள் ஹன்ஸிகா நீக்கப்பட்டு தமன்னா நாயகி ஆகிவிட்டார்.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்த "நான்' படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பு அந்தப் படக்குழுவுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. இதையடுத்து "திருடன்' என்ற பெயரில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார் விஜய் ஆண்டனி. படத்தின் தயாரிப்பாளரும் இசையமைப்பாளரும் அவரே.
ஷங்கரின் உதவியாளர் பிரபுராஜ சோழன் இயக்கும் "கருப்பம்பட்டி' படத்தில் வரும் "நாட்டி ராஜா ராஜா...' என்ற துள்ளலான பாடலை பிரபல இந்தி இசையமைப்பாளர் பப்பிலஹரி பாடியுள்ளார். இணையதளங்களைக் கலக்கி வரும் இந்தப் பாடலை பாலிவுட் ஸ்டார் அபிஷேக் பச்சன் கேட்டு, பரவசப்பட்டு பப்பிலஹரியை நேரில் சந்தித்து மனதாரப் பாராட்டியுள்ளார். அத்துடன் தயாரிப்பாளரைத் தொடர்பு கொண்டு அந்தப் பாடலை தன்னுடைய படத்தில் பயன்படுத்திக் கொள்ள அனுமதி பெற்றுள்ளார்.